செவ்வாய், 2 மார்ச், 2010

தமிழரசுக் கட்சித் தலைவரைக் கொன்று அதே கட்சியில் ஏகப் பிரதிநிதிகளென கொன்றவர்களுக்காகப் போட்டியிட்டால் என்னதான் உருப்படும்? உண்மைகள் செத்துவிடாது!


உண்மைகள் மனிதரைப்போல செத்துவிடாது! யாரும் ஒருபோதும் மறைத்துவைக்கவும் முடியாது – மறைக்கவும் முடியாது. என்றோ ஒரு நாள் அது வெளிவந்தே தீரும்!

ம(மா)க்களுக்கு அது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல சிலர் பட்டுத் தெளிவார்கள். ஒரு சிலருக்குப் பட்டும் புத்திவருவதில்லை!

தற்போது தமிழரசுக் கட்சித் தலைவராக இருக்கும் திரு. இரா. சம்பந்தன் அவர்களுக்காக பலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புகழ்மாலை தொடுக்கிறார்கள். சரி அதை ஏற்றுக்கொண்டாலும் - நியாயம் - உண்மைத் தன்மைகளை ஓரளவுக்காவது இவர்கள் தொட்டுச் செல்வார்கள் என்றால் அங்கு எதையுமே காணவில்லை! இதில் பெரிய நகைச்சுவை என்னவெனில் வெளிநாடு வந்தபின்னர்தான் பலருக்கும் சுதந்திரம் - உரிமை பற்றி அதிகமாகப் பேசவும் எழுதவும் முடிகிறது!

தமிழரசுக் கட்சி 1977 முதல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலக முகவரியைக் கொண்டு அதே தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இயங்கிவந்தது. இதற்கும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. 1977இல் தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்ட சமயம் மறைந்த திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் தனக்கு யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதி தரப்படவில்லை என கூட்டணியிலிருந்து பிரிந்துசென்று சுயேட்சையாக யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டபின் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆரைப் பிடித்து ஒரு மாதிரி தனது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை தன்வசம் எடுத்தார். இதனால் தமிழரசுக் கட்சியையும் பத்திரப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன் தலைவராக திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களும் அவர்களின் மறைவுக்குப் பின் திரு. அ. தங்கத்துரை தலைமையில் கட்சி பௌத்தலோக மாவத்தையின் முகவரியில் பதியப்பட்டது. இந்தக் கட்சியில் எனது பெயரும் இருந்தது. இப்போது நீக்கப்பட்டிருக்கலாம்.
1994 தேர்தலில் திரு. அ. தங்கத்துரை அவர்கள் வெற்றிபெற்றதைப் பொறுக்கமுடியாத திரு. இரா. சம்பந்தன் அவரைப் படுத்தியபாடு பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் மனச்சாட்சிப்படி இயங்கும் கூட்டணி உறுப்பினர்களுக்கு இது தெளிவாகத் தெரியும். இந்தப் பதவிக்காக அவர் கலாநிதி நீலனையும் இழுத்து ரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த படாதபாடுபட்டார். 3 வருடம் தனக்கு 3 வருடம் தங்கத்தரைக்கு என சம்பந்தர் பதவிக்காக ஒரு கட்டாய ஒப்பந்தத்தை தயார்படுத்தினார். சரியாக 3 வருடத்தில் 05.07.1997இல் பாடசாலைக் கட்டிடத் திறப்பு விழாவில் திரு. அ. தங்கத்துரை கொலைசெய்யப்பட்டார். அவருடன் கூடவே பல கல்விசார் அறிஞர்களும் கொல்லப்பட்டனர். (பதவிக்காக கொலையையும் செய்ய ஏற்பாடு செய்தாரா என்று இப்போது சந்தேகம் எழுகிறது. ஏனெனில் புலிகளை அவர் அதற்காகத்தான் பயன்படுத்தினார்போல எனக்குப் படுகிறது. இது எனது தனிப்பட்ட கருத்து!)
2001 தேர்தலில் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டபின் 05.06.2002இல் மரணமடைந்த தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்களின் தேசியப்பட்டியல் நாடாளுமன்றப் பதவிக்கு ஏற்கனவே தேர்தல் திணைக்களத்திற்குப் பெயர் குறிப்பிட்ட திரு. முத்துலிங்கம் அவர்கள் இருக்கத்தக்கதாக தனது மாவட்டத்தில் தோல்வியடைந்த திரு. துரைரட்ணசிங்கத்தை நியமிப்பதற்காக – கட்சித் தலைவரின் உடல் சாம்பலாவதற்கு முன்னரே முகமாலைத் தடுப்புச் சுவரைக்கடந்து புலிகளிடம் ஓடியவர்கள் - சம்பந்தனும் - ஜோசப்பரும் மற்றும் அன்றைய புலிப்பாட்டுப்பாடியவர்கள் அனைவரும்.

கூட்டணித் தலைவரின் பக்கத்தில் அவரது சாம்பல் அள்ளும்வரை ஆரம்ப சகாவான ஆனந்தசங்கரியே பக்கத்திலிருந்தார். இவர்கள் காங்கிரஸிலிருந்து கூட்டணிக்கு வந்தவர்கள்! இன்றுவரை கூட்டணிக்காகவே தம்மை அர்ப்பணித்தவர்கள்.

திரு. தங்கத்துரை அவர்களின் மறைவுக்குப் பின்னர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் திரு. ஆவரங்கால் சின்னத்துரை அவர்கள். இவரது சம்மதம் பெறப்படாமலேயே 2004 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்த பிரிந்து சென்றவர்கள் தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பின் கட்சியாக மீள தேர்தலில் பயன்படுத்தினர்.அப்போது புதிய தலைவராக பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களை நியமித்தார்கள். தற்போது இரா. சம்பந்தனுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றப் பதவியிலும் சரி - தமிழரசுக் கட்சித் தலைவர் பதவியிலும் சரி அவருக்குப் பிறகுதான் இவர். 1970இல் தங்கத்துரை மூதூர்த் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரானார். 1977இல் இவர் திருகோணமலைத் தொகுதியின் உறுப்பினராமையும் குறிப்பிடத்தக்கது.

கட்சியின் தலைவர்கள் இருவரைக் கொன்றவர்கள் யாரென அகிலமே அறியும்
இவர்கள் தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று சொல்லி பாவம் அஹிம்சையை தன் சிரமேற்கொண்டுவாழ்ந்து எம் தலைவர் ஈழத்தக் காந்தி தந்தை செல்வா - அப்பாவித் தமிழ் மக்களின் குடியுரிமையைப் பறித்தபோது ஏற்படுத்திய ஒரு பலமான அமைப்பை, களவு – கொலை – கடத்தல் போன்ற அநீதிக்குப் பெயர்போன கும்பலுக்காக சம்பந்தன் - மாவை கூட்டுச் செய்த அநியாயத்திற்கு ஆண்டவனின் தண்டனையே இன்றைய நிலை! கடவுள்தான் தமிழரைக் காப்பாற்ற வேண்டும் என்று இவர்களுக்காகத்தான் தந்தை சொன்னாரோ தெரியாது! இவர்கள் - இவர்களோடு தேர்தலில் போட்டியிட்டவர்கள் - இவர்களுக்காக தேர்தலில் வாக்களித்தவர்கள் ஏன் இத்தனைக்கும் மேலாக இவர்களின் ஏகப் பிரதிநிதிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள்!
இனிமேலும் இந்தத் தமிழரசுக் கட்சியையும் - அவரது வீட்டுச் சின்னத்தையும் - அவரது அமைதியான பெயரையும் எந்த அநீதியாளரும் சொல்ல அனுமதியில்லை என்பதுடன் இவற்றை மேலும் பயன்படுத்தினால் இதைவிட மேலும் அழிவுகள்தான் எதிர்நோக்க வேண்டி வருமென அவர்களின் ஆத்மாக்களில் நின்று நான் சபதம் செய்கிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக