ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

தேர்தல் திருவிளையாடல்கள் 4 நிறைவேறின! இன்னும் எத்தனையோ?

கடந்த 2004இல் ஏகப்பிரதிநிதிகளுக்காக ஒப்பாரிவைத்த 4 கட்சிக் கூட்டமைப்பு தமக்குள் குத்துச்சண்டைபோட்டு பிரிந்தது ஒரு விளையாட்டு!

மனோ கணேசனை கண்டியில் தேர்தலில் போட்டியிட வரவேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்தது இரண்டாவது.

பேரியல் அஷ்ரப் ஆதரவாளர்களை மிரட்டியிருப்பது 3வது.

யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளரை மிரட்டிய அரச கட்சியின் வண்டவாளத்தை பிபிசி வெளிப்படுத்தியதன்மூலம் இன்னோரு விளையாட்டு அம்பலம்.

இப்படி இன்னும் எத்தனை விளையாட்டுக்கள் வரப் போகின்றன.

நடுரோட்டில் நிற்கும் தமிழர்கள் எவரை நம்பி வாக்களிக்கப் போகிறார்களோ?

யாமறியோம் பராபரனே!

1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க்கட்சிகள் ஒரு ஆய்வு!

தமிழ்க்கட்சிகள் இவ்வளவு சோதனைகள் - வேதனைகள் - இழப்புக்கள் - அழிவுகள் - என்பவற்றுக்குப் பின்னும் திரும்பத்திரும்ப சிங்களக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதையும் தமக்குள் தனித்தனியாகப் பிரிந்தும் போட்டியிடுவதைப் பார்த்தால் தலையைக் கொண்டுபோய் எங்காவது சுவரில் மோதவேண்டும் போல இருக்கிறது.

கடந்தகால தேர்தல் முடிவுகளைப் பார்ப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது.

1977இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்

ஐக்கிய தேசியக்கட்சி 31,79,221 – 140 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி 4,21,488 – 18 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 18,55,331 – 8 ஆசனங்கள்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 62,707 – 1 ஆசனம்
லங்கா சமசமாஜக் கட்சி 2,25,317
கம்யூனிஸ்ட் கட்சி 1,23,856
மகாஜன எக்சத் பெரமுன 22,639
சுயேட்சைகள் 3,53,014 – 1 ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய பெரும்பான்மை பலத்தைக் கொண்டு நாட்டின் 1972இல் ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியின் தலைமையில் இருந்த கூட்டணியரசின் அரசிலமைப்பை மாற்றி விபுதியதொரு அரசியல் சாசனத்தை உருவாக்கி அதன்மூலம் – ஜனாதிபதி ஆட்சிமுறையை ஏற்படுத்தியது. பிரதமராயிருந்த ஜே.ஆர் ஜனாதிபதியாகவும் ரணசிங்க பிரேமதாச பிரமராகவும் தெரிவாகினர். மேலும் பாராளுமன்றத்தின் காலத்தை 6 ஆண்டுகளுக்கு மேலதிகமாகத் தொடர்ந்தும் தக்கவைக்க இந்த அரசு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை 22.12.1982இல் நடத்தியது.

அதில் அரசின் கொள்கைக்கு
சார்பாக 31,41,223 வாக்குகளும்
எதிராக 26,05,983 வாக்குகளும் கிடைத்தன.

ஜனநாயகத்திற்கு முரணாக மக்கள் பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்களித்தது 6 ஆண்டுகளுக்கு மட்டுமே என மேலதிகமான 6 ஆண்டுகளை ஏற்காது தமிழர் விடுதலைக் கூட்டணியின் 16 உறுப்பினர்கள் தமது பதவிகளைத் துறந்தார்கள். இவர்களில் இருவர் தேர்தல் முடிந்த சில காலத்திலேயே ஆளும் கட்சியுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருந்தனர். கூட்டணி இல்லாத நிலையில் அடுத்த 6 ஆண்டுகாலம் எதிர்க்கட்சியாகும் வாய்ப்பை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெற்றது. அன்றைய நாளில் ஐ.தே.கட்சியினால் சுதந்திரக்கட்சித் தலைவி திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்காவின் பாராளுமன்ற உறுப்பினர் உரிமையையும் குடியுரிமையையும் பறிக்கப்பட்டதை நினைவுபடுத்த வேண்டும். அவரது மகன் அனுர பண்டாரநாயக்க எதிர்க்கட்சித் தலைவரானார்.

20.10..1982இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. வெற்றிபெற்று ஜனாதிபதியானார் - ஜே.ஆர்.

ஜே.ஆர் ஜெயவர்த்தனா 34,50,811
ஹெக்டர் கொப்பேகடுவ 25,48,438
றோகண விஜேவீர 2,73,428
குமார் பொன்னம்பலம் 1,73,934
கொல்வின் ஆர்.டி.சில்வா 58,531
வாசுதேவ நாணயக்கார 17,005

19.12.1988இல் 2ஆவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற ஆர். பிரேமதாசா ஜனாதிபதியானார்.

ரணசிங்க பிரேமதாசா 25,69,199
சிறிமாவோ பண்டாரநாயக்கா 22,89,960
ஓஸி அபயகுணசேகர 2,35,719

1989 இல் நடைபெற்ற பாராறுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டது. ஐக்கிய சோசலிச முன்னணி என்ற கூட்டில் ஸ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி -லங்கா சம சமாஜக் கட்சி – நவ சமசமாஜக் கட்சி - ஸ்ரீ லங்கா மகாஜன பக்சய என்பன இணைந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசு10ரியன் சின்னத்தில் ஈ.என்.டி.எல்.எப் - ஈ.பி.ஆர்.எல்.எப் - டெலோ – ரி.யூ.எல்.எப். டின்பன இணைந்தும் போட்டியிட்டன. ஈரோஸ் அமைப்பு சுயேட்சையாக போட்டியிட்டது.

ஐக்கிய தேசியக்கட்சி 28,37,961 – 125 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 17,80,599 – 67 ஆசனங்கள்
ஈரோஸ் அமைப்பின் சுயேட்சை 2,29,877 – 13 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி 1,88,593 - 10 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2,02,014 - 4 ஆசனங்கள்
ஐக்கிய சோசலிச முன்னணி 1,60,271 – 3 ஆசனங்கள்
மகாஜன எக்சத் பெரமுன 95,793 – 3 ஆசனங்கள்
சுயேட்சைகள் 1,01,210

(தொடரும்)

ஆனந்தசங்கரியின் புதல்வர் ஜெயசங்கரி கொழும்பு மாவட்டத்தில் போட்டி!


தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஜெயசங்கரி ஆனந்தசங்கரியை தலைமை வேட்பாளராகக் கொண்டு போட்டியிடுகின்றது. இதேவேளை திருகோணமலை, அம்பாறை தவிர்ந்த அனைத்து வடக்கு கிழக்கு மாவட்டங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் தனித்து போட்டியிட வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ் மாவட்டத்தில் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தலைமையிலும் வன்னி மாவட்டத்தில் செல்வரட்ணம் சுதாகரன் தலைமையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சோமசுந்தரம் யோகானந்தராஜா தலைமையிலும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.

சனி, 27 பிப்ரவரி, 2010

அறிவித்தல்

கடந்த 2 மாதங்கள் வெளியான பதிவுகள் திடீரென அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டதால் திகதிகளில் குளறுபடி இருக்கிறது. அதற்காக மன்னிக்கவும். பழைய கிருத்தியத்தில் வெளியான செய்திகள் முழுவதும் சரியான திகதி - நேரம் இடப்பட்டு தனிப்பட்டியலாக விரைவில் வெளிவரும்.

நன்றி!

அன்புடன்
தங்க. முகுந்தன்

2001 தேர்தலில் ஒன்றுபட்டு கூட்டமைப்பை ஏற்படுத்திய 4 தமிழ்க்கட்சிகளின் ஊடகங்களுக்கான அறிக்கை (பகுதி 2)

ஊடகங்களுக்கு - 22.10.2001 என இரு பக்கங்களில் வெளியான அறிக்கையின் முதற்பகுதி நேற்று வெளியானது - இன்று அதன் மறுபகுதி பிரசுரமாகிறது

வரலாறுகள் திரிவுபடுத்தப் படக்கூடாது என்பதற்காக இவை ஒரு ஆவணமாக பதியப்படுவதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் இவற்றை எடுத்து பிரசுரிப்பதில் சில பிரச்சனைகள் இருப்பதால் தாமதமாவதற்கு வாசகர்கள் என்னை மன்னிக்கவும்.
----

1. 5.12.2001இல் நடைபெறும் தேர்தலில் பின்வரும் அடிப்படையில் இக் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகளின் அபேட்சகர்கள் போட்டியிடுவர்.

யாழ்ப்பாணம் த.வி.கூ - 7, அ.இ.த.கா - 3, த.ஈ.வி.இ - 1 ஈ.பி.ஆர்.எல்.எவ் - 1.

வன்னி த.வி.கூ - 3, அ.இ.த.கா - 1, த.ஈ.வி.இ - 4 ஈ.பி.ஆர்.எல்.எவ் - 1.

மட்டக்களப்பு த.வி.கூ - 5, அ.இ.த.கா - 1, த.ஈ.வி.இ - 2 ஈ.பி.ஆர்.எல்.எவ் - 1.

திருகோணமலை த.வி.கூ - 3, அ.இ.த.கா - 1, த.ஈ.வி.இ - 2 ஈ.பி.ஆர்.எல்.எவ் - 0.

அம்பாறை த.வி.கூ - 5, அ.இ.த.கா - 1, த.ஈ.வி.இ - 1 ஈ.பி.ஆர்.எல்.எவ் - 0.

2. தேசியப்பட்டியலுக்கான அபேட்சகர்களை பின்வரும் முறையில் கூட்டமைப்பு நியமிக்கும்.

1. த.வி.கூ
2. அ.இ.த.கா
3. த.ஈ.வி.இ
4. ஈ.பி.ஆர்.எல்.எவ்

தேர்தலின் பின் கூட்டமைப்புக்கு தேசியப்பட்டியலில் ஒரு ஸ்தானம் கிடைத்தால் அந்த முதலாம் ஆசனம் தமிமர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கப்படும். தேசியப்பட்டியலில் இரண்டாவது இடம் கிடைத்தால் அது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும்.

3. எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒன்றுக்கொன்று பகிரங்கமாக குற்றச் சாட்டுக்களை வெளிப்படுத்தி ஊறுவிளைவிக்கும் வண்ணம் எந்தவித பிரசாரமோ வெளியீடுகளோ செய்யக்கூடாது.

4.கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கிடையில் எந்தவித பிணக்கோ வேறுபாடுகளோ ஏற்பட்டால் அதுபற்றி சகல கட்சிகளும் கலந்தாலோசித்து சமாதானமாகத் தீர்க்க வேண்டும். பெரும்பான்மையோரின் கருத்துக்கமைய விட்டுக்கொடுத்து புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும். அப்படியாக சுமூகமான தீர்வு கிடைக்காவிட்டால் அனுசரணையாளர் குழுவின் உதவயை நாடவேண்டும். இக்குழுவில் பின்வருவோர் அங்கத்துவம் வகிப்பர்.

திரு. வி. கைலாசபிள்ளை
திரு. கந்தையா நீலகண்டன்
திரு. வீ. இ. வடிவேற்கரசன்
திரு. நிமலன் கார்த்திகேயன்
திரு. எஸ். தியாகராஜா
தீ. க. ஜெயபாலசிங்கம்

கூட்டமைப்புச் சார்பாக

இரா.சம்பந்தன்(ஒப்பம்) செயலாளர் நாயகம் தமிழர் விடுதலைக் கூட்டணி
ந. குமரகுருபரன்(ஒப்பம்) பொதுச் செயலாளர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
ந. சிறிகாந்தா(ஒப்பம்) முதல்வர் தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
சு.பிரேமச்சந்திரன்(ஒப்பம்) செயலாளர் நாயகம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

2001 தேர்தலில் ஒன்றுபட்டு கூட்டமைப்பை ஏற்படுத்திய 4 தமிழ்க்கட்சிகளின் ஊடகங்களுக்கான அறிக்கை

ஊடகங்களுக்கு - 22.10.2001

தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பத்திற்கேற்ப தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்ஈழ விடுதலை இயக்கம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவை ஒன்று சேர்ந்து இந்தக் கூட்டு அமைப்பை ஆரம்பித்து எதிர்வரும் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம். நாங்கள் புரிந்துணர்வுடன் ஒன்றாகச் சேர்ந்து இயங்க முடிவு செய்ததுபற்றி சில முரண்பட்ட செய்திகள் சில ஊடகங்களில் வெளிவந்திருப்பதால் இந்தக் கூட்டறிக்கையினை நாம் வெளியிடுகின்றோம்.

1. தமிழ்த் தேசிய இனத்தின் அபிலாஷைகளை பூரணமாகத் திருப்திப்படுத்தக் கூடியதும் நிறைவேற்றி வைக்கக் கூடியதுமான ஒரு அரசியல் ஏற்பாடு, தமிழ்த் தேசிய இனத்தின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், தமிழ்த்தேசிய இனத்தின் மரபுவழித் தாயகத்தில் நிறுவப்படவேண்டும் என்பதே இந்தக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.

2. தமிழ் மக்கள் தங்களின் அரசியல் உரிமைகளைப் பெறுவதற்காகப் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் இப்போராட்டம் சாத்வீகமாக அமைந்தது. நாளடைவில் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வு கிடைக்காது என்று ஏற்பட்ட நிலையில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலையேற்பட்டது.

3. கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தளராது ஆயுதப் போராட்டத்தை நடத்தி ஒப்பற்ற தியாகங்களைச் செய்திருக்கின்றது. தமிழ்த் தேசியப் பிரச்சினை, சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்டமும் அர்ப்பணிப்புகளும் தியாகமும் அதிமுக்கிய காரணமாக இருந்திருக்கின்றது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளையும் அபிலாஷைகளையும் வன்முறையால் அடக்கி ஒடுக்கிவிடமுடியாது என்பதனைச் சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் சகலரையும் உரண வைத்தவர்களும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரே! அவ்வண்ணம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமே அதி உன்னத நிலையைப் பெற்றிருக்கின்றது.

4. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அர்த்த பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாவிட்டால் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு சமாதான முறையில் அரசியல் தீர்வு காணப்பட முடியாது. எனவே அத்தகைய பேச்சுவார்த்தை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் மட்டுமே எவ்வித தாமதமுமின்றி ஆரம்பிக்கப்படுவது இன்றியமையாதது. துமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான பேச்சுவார்த்தைகள் அர்த்தபூர்வமாக அமையவும் அவை வெற்றிபெறவும் வழிவகுக்கப்பட வேண்டுமானால் வேறு எந்த ஒரு தமிழ் அமைப்புடனும் சமகாலப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படக்கூடாது.

5. தேர்தலின் பின்பும் எங்கள் கூட்டு அமைப்பு தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அரசியற் தீர்வு காண தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த அடிப்படையில்தான் இந்தக் கூட்டு அமைப்பு இயங்கும். நாங்கள் பாராளுமன்றத் தேர்தலில் நிற்பது அந்த நோக்கை அடைவதற்கேயன்றி பதவிகளைப் பெறுவதற்காக அல்ல என்பதனையும் வலியுறுத்த விரும்புகிறோம்.

கூட்டமைப்பு சார்பாக

இரா.சம்பந்தன்(ஒப்பம்) செயலாளர் நாயகம் தமிழர் விடுதலைக் கூட்டணி
ந. குமரகுருபரன்(ஒப்பம்) பொதுச் செயலாளர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
ந. சிறிகாந்தா(ஒப்பம்) முதல்வர் தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
சு.பிரேமச்சந்திரன்(ஒப்பம்) செயலாளர் நாயகம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

(இரு பக்கங்களில் வெளியான அறிக்கையின் முதற்பகுதி இன்று - மற்றையது நாளை )

தேர்தல் பம்மாத்துகள் - புதியவர்களின் வருகை - வாக்குகள் சிதறும் நிலை!

தேர்தல் நாள் நெருங்க நெருங்க – நடக்கின்ற – நடக்கப் போகின்ற செயல்களைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்ற நிலையில் இதை மிகவும் விரக்தி நிலையில் எழுதுகின்றேன்.

தற்போது கிடைத்துள்ள செய்திகளின்படி பார்த்தால் இந்தத் தடவை வடக்கு கிழக்கில் தமிழ் வாக்காளர்களின் வாக்குகள் சிதறி பாராளுமன்ற ஆசனங்கள் கடந்த 2004இல் பெற்றதில் அரைப் பங்காகுமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

கூட்டமைப்புக்கு 2001இல் 14 மாவட்ட ரீதியிலான உறுப்பினர்களும் 1 தேசியப்பட்டியலுமாக மொத்தம் 15 ஆசனங்கள் கிடைத்தன. 2004இல் 20 மாவட்ட ரீதியிலும் 2 தேசியப்பட்டியலிலும் மொத்தம் 22கிடைத்தது. இம்முறை குறைந்தது யாழ்ப்பாணத்தில் 4 வன்னியில் 2 திருமலையில் 1 மட்டக்களப்பில் 2 அம்பாறையில் 1 தேசியப்பட்டியல் 1 ஆக மொத்தம் 11. இது எனது கணக்கு. பொறுத்திருந்து பார்ப்போம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அதிகாரப்போக்கால் சிதறிய நாடு தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் மேலும் சிதறப்போகிறதா?

அனைத்துக்கட்சிகளுக்குள்ளும் பிளவை ஏற்படுத்தி தனது காய்நகர்த்தலில் ஜனாதிபதி மிகச் சிறப்பாக வெற்றியடைவாரா?அதாவது அவரது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் யுக்தி சாத்தியமாகுமா?

தமது குறுகிய சுயநலங்களுக்காக தமிழர்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்தபின்பும் வெட்கமில்லாமல் போட்டிபோடும் இந்தக் கூட்டமைப்புக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டவேண்டும். ஒன்றுபட்டு மக்கள் இவர்களை வீடுகளுக்கு அனுப்புவதே சரியான வழி!இதை தமிழ் ம(மா)க்கள் செய்வார்களா?

பழைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஓரிருவரைத்தவிர ஏனையோருக்கு ஓய்வூதியமும் கிடைத்துவிட்டது. பாவம் வாக்களித்த அப்பாவிப் பொதுமக்கள் நடுத்தெருவில் - அகதி முகாமில் - அடுத்தவர்கள் வீட்டில் அடுத்த நேரத்துக்கு என்ன செய்வது என்று ஏங்கித் தவிக்கும்பொழுது புதியவர்களுக்கு இனி ஓய்வூதியம் பெற வழி சமைப்போமா?

பிரதேச வாதத்தை ஏற்படுத்தி ஆயுதப் போராட்டத்தை( நான் ஏற்றுக்கொள்ளவில்லை) முடிவுக்கு கொண்டுவர அரும்பாடுபட்ட கருணா-பிள்ளையான் கூட்டமைப்பு இப்போதுள்ள கையறுநிலையில் என்ன செய்யப்போகிறார்கள்?

முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியதுபோல (இந்தச் செய்திபற்றி இதுவரை எனக்கு தெரியாமலிருந்தது தற்போது தான் எனது காதுகளுக்குள் எட்டியது அதனால் இதையும் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்) - 2004.3.30 தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற வேட்பாளர் ராஜன் சத்தியமூர்த்தியும் அவரது உறவினர் கந்தையா கனகசபையும் சுட்டுக்கொல்லப்பட்ட சில மணி நேரத்தில் யாழ்ப்பாணிகளை இன்று மாலை 4.00மணிக்கே உடனடியாக மட்டக்களப்பைவிட்டு வெளியேறும்படி ஒலிபெருக்கியில் வேண்டுகோள் விடுத்ததையும் மக்கள் அவசரஅவசரமாக தமது கடைத் திறப்புக்களை அவர்களிடம் கையளித்துவிட்டு வெளியேறிய சம்பவத்தை மறந்து விட முடியுமா?

யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பது எதற்கு?

முடிவெடுப்பது வாக்காளர்களாகிய நீங்களே!

இக் கட்டுரை மூலம் நான் பிரதேச வாதத்தை முன்னெடுப்பதாக யாரும் எண்ணவேண்டாம். இந்த ஆயுதப் போராட்டம் அமைதியாக இருந்த வடக்கு கிழக்குப் பகுதிகளை இன்று சுடுகாடாக மாற்றியிருப்பதுதான் மனவேதனை - தெரிந்தோ தெரியாமலோ மக்களும் வாக்களித்து இந்த நிலையை வாங்கிவிட்டார்கள்.

மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகுமென்று பலரும் சொல்கிறார்கள் - வெளிநாடுகளில் இருந்தபடி. பட்ட மக்களுக்குத்தானே அந்த வலியும் - நஸடமும் தெரியும்.

தந்தை செல்வாவைப் பற்றி ஒருவர் ஒரு கட்டுரையில் அப்படி எழுதியிருக்கிறார் இந்த நேரத்தில் தந்தையையும் தந்தையின் கட்சி மற்றும் சின்னத்தைப் பாவிக்கும் தமிழரசுக் கட்சிக்கும் அதன் சின்னமான வீட்டில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் அதில் வரும் ஒரு பந்தியை தெரிவிக்க விரும்புகிறேன். ஒரு உயிருக்கும் ஒரு உடமைக்கும் அழிவு வராமல் பார்த்துக்கொள் இதுதான் அவர் எங்களுக்குத் தந்த முழுமையான பொன் அமிர்தம். (தந்தை செல்வா 1898 - 1998 கனடா : பக்கம் 85இல் இருந்து)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் அவர்களுக்கு எனது நன்றிகள்!

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் பிரச்சனை ஏற்படுவதற்கு(2002) நீங்கள்தான் காரணமாக இருந்தீர்கள்.

கடந்த 22.5.2009இல் உங்கள் மூவருக்கும் (சம்பந்தன், மாவை. சேனாதிராசா ஆகியோர்) எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதுபோல உங்கள் கூட்டமைப்பும் உடைந்துவிட்டது.(தீர்க்க தரிசியான தந்தையை நான் உண்மையாக நேசிப்பதால் சொல்லிய 5 மாதங்களுக்குள்ளேயே பிரச்சனை வெளிப்பட்டிருக்கிறது).

நீங்களும் இப்போது தேர்தலில் போட்டியிடாது விலகியிருக்கிறீர்கள். நான் பதவியிலிருக்கும்போது விலகுமாறு வேண்டியிருந்தேன். நீங்கள் பதவிக்காலம் முடிந்தபின் போட்டியிடாது விலகியிருக்கிறீர்கள்.

காலம் கடந்த உங்களின் செயலுக்கு வாழ்த்துகிறேன். இந்தத் தடவை திருமலையில் ஒரு ஆசனம் கிடைக்க முடியுமா என கொஞ்சம் சிரமப்பட்டு உழையுங்கள்.

நன்றி.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம் மிக மிக அருமை! அளவானவர்கள் பார்த்து சரியாகத் தொப்பியைப் போட்டால் நாடு உருப்படும்!

கடந்த சில தினங்களாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் - சிரிக்கவும் சிந்திக்கவும் மிக அருமையாக இருக்கிறது.

எனக்குப் பிடித்த சிரிப்பான தலையங்கம் அர்ஜூனா பந்தை அடி சுசந்திகா பந்தை ஓடிப்பிடி என்பது 21.02.2010இல் வெளிவந்ததாகும். இதில்

எதிர்வரும் தேர்தலில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த அர்ஜுன ரணதுங்க மற்றும் சனத் ஜெயசூரியா, முத்தையா முரளிதரன் ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்கா ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் வென்றால் அர்ஜுனா, ஜெயசூரியா, முரளி ஆகியோர் பந்தை அடிக்க அதனை சுசந்திகா ஓடிப்பிடிக்க, சபாநாயகர் எழுந்து நின்று நான்கு ஓட்டங்கள், ஆறு ஓட்டங்கள் என்று அறிவிக்க நாடாளுமன்றம் நல்லதொரு விளையாட்டுக் களமாக மாறும் - என்றுள்ளது. முத்தையா முரளிதரன் தான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று பின்னர் அறிவித்ததையும் நினைவுபடுத்த வேண்டும்.

இன்றைய தலையங்கமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஏமாற்றாதீர்கள்
என்பதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களுக்கு சரியானதொரு சவால் விடப்பட்டிருக்கிறது. தள்ளாதவயதில் ஏனோ புலம்புகிறார் போலத் தெரிகிறது. எல்லாம் வரும் 8ஆந்திகதி முடிவுக்கு வரும்.

நேற்றைய தலையங்கத்தில் எல்லாம் சம்பந்தர் மயம் சிவமயத்திற்கு ஏது இடம்? என்பதிலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து போனதில் ஆச்சரியப்படுவதற்கு இடமில்லை. ஆனால் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கூட்டமைப்பில் இடம்பெறஇ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காங்கிரஸில் என்ற உடைவு இருக்கிறதே அடே! அப்பா. இப்படியும் ஒரு தமிழ்ப் பற்று.

போங்கடா சாமி என்று கூறிவிட்டு ஒதுங்கி விடலாம் என்றால்இ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை கனகச்சிதமாக வெளியேற்றிவிட்டு அவரின் இடத்தை பிடித்துக் கொண்ட மகா தந்திரம் இருக்கிறதே ஆண்டவா! இப்படியும் மனிதர்களா? எப்படி எப்படியயல்லாம் காய் நகர்த்தி இருந்த கூட்டை உடைத்து புதிய கூட்டு உருவாகியுள்ளது.

செத்துவிட்டாரென சிந்தித்ததனால் - எம்நாடும் செத்துக்கொண்டிருக்கிறதே! - தமிழ் முஸ்லிம் பேரினவாதங்கள் எனும் புதியபிசாசுகளும் இப்போது பித்துப்பிடித்து ...

தந்தை செல்வாவின் நூற்றாண்டுவிழாவுக்காக 1998இல் அன்றைய அமைச்சராக இருந்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் - எஸ்.ஜே.வியை என் இறைக்கைகளில் காணுங்கள் என்ற கவிதையிலிருந்து ஒரு சில பகுதிகளை இன்றைய தேவை கருதி பதிவிடுகிறேன்.

அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கும்
மானிடத்தை உயர்த்தி விடுவதற்காய் கை கொடுப்பவர்கள்!
மரமாகி நிழல் தருபவர்கள்!
மனச்சாட்சியை யார்க்கும் - எதற்குமே அடகு வைக்காதவர்கள்!....

இறந்த பின்பும் உயிர்வாழும் சிறந்த மனிதனை அழைத்துச் செல்ல வந்துள்ளேன்!

இலங்கைக்கு அவரின் தேவை உடனடியாக இருக்கிறது!
இரத்தக் கறைகளிளை கழுவித் துடைப்பதற்காய்!
பூமிக்கு உடனே அவர் தேவை!
அவருள்ளமெனும் கரையாத புதிய சவர்க்காரத்தினால் வட கிழக்கில் படிந்துள்ள அழுக்குகளைக் கழுவி அகற்றுவதற்காய் ஓடோடி வந்துள்ளேன்! முழு நாடுமே இருள் போக்க அந்த முழுமதியை தேடுவதால் ....

மறுக்கப்பட்ட உரிமைகள் மட்டுமல்ல
மறைக்கப்பட்ட உரிமைகள் மட்டுமல்ல
மறந்துவிட்ட உரிமைகளையும் தான் அடிக்கடி நினைவூட்டாவிட்டால்
எல்லாவற்றையும் சேர்த்து பொல்லாதவர்கள் பூமியில் புதைத்து விடுவார்கள்!
அத்துடன் நீதி நேர்மை உண்மை சத்தியம்......
என்று அத்தனை உயர்ந்த பண்பையும் எரித்தும் புதைத்தும் விடுவார்கள். அந்த புதைகுழிகளையும் கூடவே மறைத்தும் விடுவார்கள்....


ஐம்பது ஆண்டுகட்குப் பின்பு இந்த நாடு
மீண்டும் நீங்கள் காட்டிச் சென்ற வழியில்
சமாதானத் தாள்களில் புதுக்கவிதையொன்றை தீட்டிக்கொண்டிருக்கிறது.
பேரினவாதம் என்பதற்குப் பொருள் தந்த பேராசிரியனே!
உங்களையொரு பைத்தியக்காரன் என்று சொன்ன இந்த இலங்கைத் திருநாடு
அதையின்று மறந்து
அப்படிச் சொன்னவர்களைத்தான் இத்தனை காலமும்
மனநோய்விடுதியில் வைத்திருக்க வேண்டும்
என்ற ஒரு குற்ற ஒப்புதலையும் செய்து கொண்டிருக்கிறது.

அதுமட்டுமன்றி இந்த நாடு பேரினவாதத்திற்கு
புது இலக்கணங்களும் கூறிக்கொண்டிருக்கிறது!
இந்த நாட்டை குட்டிச்சுவராக்கிய பேயும் அதுதான்!
பிசாசும் அதுதான்!
என்று அடையாளமும் கண்டிருக்கிறது!
தமிழ் முஸ்லிம் பேரினவாதங்கள் எனும்
புதிய பிசாசுகளும் இப்போது
பித்துப் பிடித்து அலைவதால்
அத்தனை பேய்களுக்கும் மடைவைத்து
வெட்டி துண்டாடி விளையாடி மண்ணில் புதைக்க வந்துள்ள
சித்தம் தெளிந்தவர்கள்தான்
உங்களுக்காய் ஒரு சிறு விழாவை எடுக்கின்றோம்!
கண்டு களியுங்கள்! உங்கள்
கண்கள் இனிக் கலங்கவே கூடாது!

தமிழர் விடுதலைக் கூட்டணி 4 மாவட்டங்களில் போட்டி!

தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை தேர்தலில் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய நான்கு (4) மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்களைச் சமர்ப்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கட்சியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்களும் கொழும்பில் ஆனந்தசங்கரி ஜெயசங்கரியும் முதன்மை வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த மதிகெட்ட ........ நினைத்து......பகுதி - 1

தலைப்பை பார்த்துவிட்டு என்மீது யாரும் கோபம் கொள்ள வேண்டாம்! உண்மையைத்தான் எழுதுகிறேன். எதிர்க்கட்சியாக ஒரு காலம் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களை கொச்சைப்படுத்தி கேட்டது தமிழீழம் வாங்கினது ஜப்பான் ஜீப் என்று சொல்லி அவர்களுடைய ஜீப்புக்களையும் பறிமுதல் செய்து அல்லது கொழுத்தி சேதம் விளைவித்த வீரர்கள் இன்று என்ன பண்ணினார்கள்? பண்ணுகிறார்கள்? -

அவர்கள் துரோகிகள்! அவர்களுக்குப் பின்வந்த சிலர் மாமனிதர்கள். தற்போதுள்ளவர்கள்? இதற்காகத்தான் இந்தத் தலைப்பு! கீறிட்ட இடத்தில் மக்களா - தலைவர்களா - ஏகப்பிரதிநிதிகளா - அரசா - ஜனாதிபதியா என்பதை அவரவர் விளக்கத்திற்கு ஏற்ப வைத்துப் பொருத்தி அர்த்தப்படுத்தலாம்! நான் எம்மைப் பற்றித்தான்(தமிழர்களை முன்னிறுத்தி) இன்றைய இக்கட்டுரையில் எழுத முற்படுகிறேன்.

ஜனாதிபதித் தேர்தலை 2005இல் புறக்கணித்த வடக்கு கிழக்குத் தமிழர்கள் இந்தமுறை போட்டிபோட்டு கொன்றொழித்தவனுக்கும் கொன்றொழிக்க ஆணையிட்டவனுக்கும் வாக்குகளைப் போட்டுவிட்டு இப்போ யாருக்குப் போடுவதென முழிக்கிறார்களோ? அல்லது தனக்கு விசுவாசமாக இன்றும் மனதில் இருத்தி வைத்திருக்கும் தனக்குப்பிடித்த வேட்பாளருக்கு போடப்போகிறார்களோ? நாமறியோம்!

தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்று சொல்லி பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய 22 உறுப்பினர்களும் மக்கள் நலனைக்கருத்தில் கொண்டார்களோ தாம் பதவியில் இருக்கும் வரை விடுதலைப் புலிகளுக்கு வக்காளத்து வாங்கிவிட்டு - இப்போ அவர்கள் போய்த்தொலைந்தபின்னர் தமக்குள் அடிபட்டு மக்களைப் பகடைக்காய்களாக்கி தமது பதவிகளுக்காக எங்காவது சந்தர்ப்பம் வந்தால் சரி என்பதுபோல முன்பு ஜனாதிபதியாக இருந்த டிங்கிரி பண்டா சொன்னதுபோல பெரிய மரத்தில் படரும் செடி கொடிபோல ஒட்டத் துவங்கிவிட்டார்கள். மக்கள்மீது அக்கறை கொண்டவர்களாயிருந்தால் நான் சொல்லியபடி தாம் 22 பேரும் ஒன்றிணைந்து ஏதேனும் ஒரு உருப்படியான நடவடிக்கையை எடுத்திருப்பார்கள் - புலிகள் அழிந்தாலும் சரி - மக்கள் நடுவீதிக்கு வந்தாலும்சரி - என்று எண்ணிக் கொண்டு கதிரைகளுக்காக எங்காவது வெளிநாட்டிலிருந்தாலும் குறித்த காலத்தில் வந்து அமர்ந்து தமது படியைப் பெற்றவர்கள்தானே இந்தப் புண்ணியவான்கள். இப்போது மீண்டும் ஒரு தடவை மக்களை பகடைக் காய்களாக்கி திரும்பவும் சவாரிக்கு தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள்.

புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்கள் ஏதோ ஒரு நாட்டில் அகதியாக ஆனால் சுதந்திரமாக இருந்துகொண்டு - நார்நாராய் கிழித்தெறியப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு ஆணை பிறப்பித்துக் கொண்டிருப்பதை நினைத்தால் - அது வேறு ஒரு பெரிய சோகத்தை ஏற்படுத்துகிறது!

தாம் வாழும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நடந்து கொண்டு - அந்தந்த நாட்டு மொழிகளை வேறு கற்றுத் தேர்ந்து - அல்லது இன்றும் கற்றுக் கொண்டு - சொந்த நாட்டில் இருப்பவன் மாத்திரம் தமிழுக்காக - ஈழத்துக்காக - தொடர்ந்தும் அடி முட்டாளாக இருக்க வேண்டும் என்பதில் கங்கணம் கட்டி வாழ்வதும் வேதனை!

வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் பாவம்! கடந்த 10, 15 வருடங்களுக்கு மேலாக அரசின் சோதனைச் சாவடிகளுக்குள்ளும் - ஏகப்பிரதிநிதிகளின் எல்லைக் கோட்டுக்குள்ளும் தம் வாழ்வை பழக்கப்படுத்தி ஒரு கிணற்றுத் தவளை வாழ்வை மேற்கொண்டதை யாரும் மறந்துவிட முடியாது. இப்போதுதான் அவர்கள் நடமாடித் திரியும் சுதந்திரத்தையும் முழுமையாகப் பெறாவிட்டாலும் பரந்துவிரிந்து கிடக்கும் முழு இலங்கையையும் பார்க்கவும் பழகவும் முடிகிறது.

ஏகப் பிரதிநிதிகள் தாம் நினைத்தபோது அரச விருந்தினர்களாக எந்தவித சோதனைக் கெடுபிடியுமின்றி வன்னியிலிருந்து இலங்கை விமானப்படையின் சிறு விமானங்களிலும் ஹெலிகளிலும் கொழும்புக்கு வந்து உலக வலம் வந்ததும் குறிப்பிடப்பட வேண்டியதே!

கொஞ்சம் திரும்பி - சில விடயங்களைத் தெளிவாக ஆறியிருந்து யோசித்துப் பார்த்தால்(ஆடு மாடு இரை மீட்பதுபோல) எது சரி எது பிழை என விளங்கும்!

நாளைக்குச் சந்திப்போமா!

சச்சினுக்காக!

கிரிக்கெற்றில் சாதனைபடைத்த சச்சின் டெண்டுல்கார் அவர்களுடைய ரசிகர்களுக்காக சில புகைப்படத் தொகுப்பு!






































பூனையில்லா வீட்டில் எலிக்குக் கொண்டாட்டம்! விடுதலைப் புலிகளற்ற நிலையில் கூட்டமைப்பின் குடுமிச்சண்டை!

கடந்த 2009-07-30ல் நான் எழுதிய - மறைந்த ரவிராஜ விடுதலைப் புலிகளைப் பற்றச் சொன்னது! புலிகளால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகள் அல்ல நாம்! பார்க்க - தினக்குரல் 31.07.2003 - என்ற செய்தியை மீள இப்போது நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

விடுதலைப் புலிகள் அழைத்த நேரத்தில் கிளிநொச்சிக்கு ஆஜராகிய இரா. சம்பந்தனிலிருந்து - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - சிவாஜலிங்கம் - சிறீகாந்தா படும்பாட்டை நினைக்கும்போது ஒருபுறம் பட்டினத்தாரின்

தன் வினைதன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும்
என்ற வரிகளும்

இன்னொருபுறம் அடாது செய்தவர்படாதுபடுவர் என்ற முதுமொழியும் நினைவுக்கு வருகிறது.

ஒன்று மட்டும் உண்மை விடுதலைப் புலிகள் தற்போது இல்லை என்பது மட்டும் இவர்களுடைய சண்டையிலிருந்து தெரிகிறது.

யார் எதை மறந்திருந்தாலும் காலமும் உண்மையும் தமது கடமைகளை செவ்வனவே செய்கிறது!

அநியாயம் செய்தவர்களும் - அபாண்டமாக குற்றம் சுமத்தியவர்களும் இன்று ஒரு சிலர் இல்லாத நிலையில் - மன்னிக்கவும் - மறைந்தவர்களைப் பற்றி தவறாக எழுதுகிறேன் என்று யாரும் எண்ணினால் மன்னிக்கவும். நாம்(நான்) பட்ட வேதனைகளையும் சோதனைகளையும் இவர்களும் அனுபவிக்க வேண்டும் - இவர்களை அரியாசனத்தில் இருத்திய மக்களும் அனுபவிக்க வேண்டும். இதை நான் வேண்டுமென்று சொல்லவில்லை - உலக நியதி - பல அருமையான பாடல் வரிகள் இதற்கு உதாரணமாகக் காட்ட முடியும் - உங்களை மேலும் நானும் .............என்று கருதவில்லை. (பொருத்தமான சொல்லை நீங்களே தெரிவு செய்யுங்கள்)

இன்றைய சூழலில் தமிழ்க்கட்சிகள் - தலைவர்கள் - மக்கள் - இவர்களின் நிலையை நான் விரிவாக ஆராய இருக்கிறேன்.

குறிப்பாக 2001இல் தேசியப்பட்டியல் விடயம் - அதே வருடத்தில் கூட்டமைப்பை ஏற்படுத்திய குழுவினரை உதாசீனப் படுத்தியவிடயம் - யாழ் பொதுநூல் நிலையத் திறப்பு விழா தடுத்து நிறுத்திய விடயம் - தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியின் உள்விவகாரங்களில் புலிகள் தலையீடு - அதனை சிரமேற்கொண்டு செயற்பட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் - இதன்பின் புலிகளின் அமைப்பு பிளவுபட்டமை - ஜனாதிபதித் தேர்தலில் மக்களை வாக்களிக்காமல் செய்த முயற்சி - மாவிலாறு பிரச்சனை - யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் மக்களின் மீது காட்டிய நிலை - உலக அரங்கில் யுத்தம்பற்றிய நிலைப்பாடு அதனைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்ற விடயங்களில் - ஒரு ஆய்வை மேற்கொண்டால் மாத்திரமே - தற்போதுள்ள நிலையில் - மக்களுக்கு ஒரு தெளிவு ஏற்படும் என்பது எனது எண்ணம்.

வலம்புரிக்கு பத்து வயது - வாழ்த்துக்கள்!

யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகை தனது 10ஆவது வயதை முடித்து 11ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கிறது. 11ஆவது வயதில் இணையத்தையும் ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி!

எனக்கும் வலம்புரிப் பத்திரிகைக்கும் நல்ல தொடர்பு இருக்கிறது. சில செய்திகளையும் அறிக்கைகளையும் ஏனைய பத்திரிகைகள் பிரசுரிக்காமல் இருந்த வேளையில் நடுநிலை தவறாமல் பிரசுரித்த பெருமை வலம்புரிக்கு மட்டும் உண்டு.

பொது நூலகத் திறப்பு விழாவுக்கு மக்கள் மௌனம் சாதிப்பதை சுட்டிக்காட்டி ஒரு ஆசிரியர் தலையங்கமும் தீட்டியது நினைவு படுத்த வேண்டியுள்ளது.

நடுநிலை தவறா நன்னெறி காக்கும் உங்கள் நாளிதழ் என்பது இதற்குச் சான்றாகும்.

வலம்புரியின் தன்னிகரற்ற நடுநிலைப் பணி ஓங்கட்டும் என்று வாழ்த்துவதில் நான் மன நிறைவடைகிறேன்.

ஆசிரிய பீடத்தினருக்கும் - அதன் அச்சகப் பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன்.

உண்மைகள் ஒருபோதும் பொய்யாவதில்லை. பொய்கள் ஒருபோதும் உண்மையாவதில்லை.

சுற்றுலா வரும் பெரும்பான்மையினப் பயணிகளால் யாழ் பொது நூலகத்தின் அமைதி பாதிப்பு – வாசகர்கள் படிப்பதில் சிரமம் - நூலகர் நெஞ்சம் குமுறுகிறார்!


நாடு கடந்து இருப்பினும் அடிக்கடி யாழ்ப்பாண மாநகர விடயங்களில் அதிகளவு கவனம் செலுத்தும் நான் கடந்த வாரமும் இன்றும் யாழ்ப்பாண பொது நூலகருடன் தொடர்பு கொண்டபோது அவரது பேச்சில் விரக்தி தொனித்தது. என்ன என்று விலாவாரியாக விசாரித்தேன்.

கடந்த வாரம் தொடர்பு கொண்டபோது யாரோ ஒரு வெளிநாட்டவருடன் கதைத்துக் கொண்டிருந்த பொழுதிலும் என்னுடன் பேசியபோது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உரக்கச் சிரித்துப் பேசி வாசிப்பவர்களைக் குழப்புகிறார்கள் என்று சொன்னார்.

இன்று பேசும்போது - முதல்வருடைய அறிவுறுத்தலின்படி மாலை 5.00 மணிக்குப் பின் வருபவர்கள் பார்வையிட அறிவுப்புச் செய்யப்பட்டிருப்பினும் - வருவபர்கள் பொலிசாருடனும் இராணுவத்தினருடனும் சேர்ந்துவந்து தொல்லை கொடுப்பதாக மனவேதனையடைந்தார். ஒரு கட்டத்தில் நூலகப் பணியாளரை அச்சுறுத்துமளவுக்கு சுற்றுலாப்பயணிகளுக்காக இராணுவத்தினர் முறைகேடாக நடந்து கொள்வதாகவும் செய்தி கசிந்தது.

ஒரு கோவிலைப்போல நாம் பாதுகாத்த – பராமரித்த பொது நூலகம் இன்று சுற்றுலாப் பிரதேசமாக – கண்டபடி நடத்தப்படுவதை யாரும் கண்டு கொள்வதாக இல்லை. நூலகத்தில் பணிபுரிபவர்கள் தமது எல்லையைமீறி எதுவும் செய்யமுடியாது.

கொழும்பிலும் வேறு பிரதேசங்களிலும் நூலகங்களில் மிக அமைதியைப் பேணுவோர் யாழ்ப்பாண பொது நூலகத்தில் மட்டும் இப்படி குரங்காட்டம் பண்ணுவது ஏன் என்று கேட்கத் தோன்றுகிறது.

முன்பு ஒரு தடவையும் நூலகத்தினுள் இந்திய அதிகாரிகளும் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் நூலகத்தினுள் அங்குள்ள நடைமுறையை மீறி காலணிகளுடன் சென்றதையும் நான் குறிப்பிட்டதையும் நினைவுபடுத்தி – கல்வியறிவை வளர்க்கும் நூலகத்தின் நடைமுறையை அனைவரும் ஒழுங்காக கடைப்பிடிக்க - உரியவர்கள் ஆவன செய்ய வேண்டுமென நூலகத்தில் அக்கறையுடையவன் என்ற வகையில் நான் பணிவாக வேண்டுகிறேன்.

இதுவரை காலமும் எமக்குள் முட்டிமோதிய நாம் இனிமேலாவது ஐக்கியப்படுவது அவசியம்! இதுவரை நடந்தவற்றுக்குப் பின்பாவது தமிழ்க்கட்சித்தலைவர்கள் இதை உணர்வார்களா?


தற்போது தேர்தல்கள் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட 66 அரசியல் கட்சிகளில் 18 தமிழ்க் கட்சிகள் இருக்கின்றன. இவற்றின் தலைவர்கள் ஒன்றுபட்டு மக்களுடைய பிரச்சனைகளுக்கு கௌரவமான தீர்வைக் காண முன்வரவேண்டும்!

கடந்த வருடம் சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற சிறுபான்மைக் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடலின்போது ஏதேனுமொரு உருப்படியான தீர்வை எட்டுவார்கள் என எண்ணியிருந்தபோதிலும் அது பகற்கனவாகி - இலங்கை திரும்பியதுமே கலந்துகொண்ட கட்சித் தலைவர்கள் ஒருவர்மாறி ஒருவர் அவருக்கும் இவருக்குமென தமது ஆதரவை ஜனாதிபதித் தேர்தலுக்கு வழங்குவதாகத் தெரிவித்தார்கள். திக்கற்ற தமிழர்களும் தமக்கப் பிடித்தவர்களின் கருத்தை வேதவாக்காகக் கொண்டு வாக்களித்தனர். இன்று மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி கட்சித் தலைவர்கள் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் கடந்த மாநகராட்சித் தேர்தலின்போது EPDP செய்த முட்டாள் தனமான வேலையால் இம்முறை சிலவேளைகளில் ஆளும்கட்சி தனது ஆதரவாளரை நிறுத்தலாம். யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை வாக்குகள் சிதறினாலும் தமிழரே வரலாம். ஆனால் கிழக்கைப் பொறுத்தவரை
பிளவுபட்டுப் போட்டியிட்டால் தமிழ்ப் பேசும் மக்களின் பிரதிநிதித்துவம் குறைய நேரிடும். கடந்த 2004 - 2001 தேர்தல்களை எடுத்து நோக்கின் இது புரியும்.
TNA
2001இல் மட்டக்களப்பில் 3 திகாமடுல்ல 1 திருகோணமலை 1 வன்னி 3 மொத்தம் 8
2004இல் மட்டக்களப்பில் 4 திகாமடுல்ல 1 திருகோணமலை 2 வன்னி 5 மொத்தம் 12

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் முடிவும் இதில் மிக முக்கியமானதாக அமையும்.

கடந்த 2010ஜனாதிபதித் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா 41,73,934 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
2005 தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் ரணில் விக்கிரமசிங்க 47,06,366 வாக்குகளைப் பெற்றிருந்தார்.(தோல்வி)

2010இல் மகிந்த ராஜபக்ச 60,15,934 வாக்குகளையும்
2005இல் 48,87,152 வாக்குகளையும் பெற்றதோடு இம்முறை பெருவெற்றியீட்டியமையை யாரும் மறைக்க முடியாது.

இதுவரை நடந்த ஐனாதிபதித் தேர்தல்களில் வாக்களித்த மக்களின் விகிதப்படி

1994இல் (47,09,205) சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 62.3

2010 (60,15,934)மகிந்த ராஜபக்ச 57.88

1982 (34,50,811)ஜே.ஆர் ஜெயவர்த்தனா 52.9

1999 (43,12,157)சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 51.1

1988 (25,69,199)ரணசிங்க பிரேமதாசா 50.4

2005 (48,87,152)மகிந்த ராஜபக்ச 50.29 சதவீதமான வாக்குகளைப் பெற்றிருக்கின்றனர்.

(இன்னும் வரும்)

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுக்காக தந்தை செல்வாவினால் விட்டுச் செல்லப்பட்ட அரும்செல்வம் - தலைவர் வீ. ஆனந்தசங்கரி



வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமன்றி மேற்கிலும் தெற்கிலும், மத்தியிலும் வாழ்கின்ற தமிழ் மக்களும், ஏனைய தமிழ் பேசும் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் இன்று காலத்தின் கட்டாயமாகும்.அரசுடன் முரண்படுவதற்காக அன்றி, ஏனைய இன மக்களை பாதிக்காத வகையில் அனைத்து தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை காண்பதற்காகவே. இதில் மாறுப்பட்ட கருத்துக்கு இடமில்லை. என்னையும், தமிழர் விடுதலைக் கூட்டணியையும் பொறுத்தவரையில் சமாதானத்தையும் சமத்துவத்தையும் அனைவருக்கும் பெற்றுக் கொடுப்பதற்காக ஒரு பொது திட்டத்திற்கமைய அனைவருடனும் இணைந்து செயற்பட தயாராகவுள்ளோம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் கௌரவ சௌமியமூர்த்தி தொண்டமான், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் மறைந்த தலைவர் கௌரவ.ஜி.ஜி.பொன்னம்பலம் கியூ.சி ஆகியோரின் ஆசீர்வாதத்தோடும், ஆதரவோடும் ‘ஈழத்து காந்தி’ என அனைவராலும் வாஞ்சையோடு அழைக்கப்பட்ட கௌரவ எஸ்.ஜே.வி செல்வநாயகம் கியூ.சி அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவதை எதிர்ப்பதற்கு ஒரு நியாயமான காரணம் எதுவும் இருக்க முடியாது. தமிழ் காங்கிரசும், கௌரவ எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழரசு கட்சியும் இணைந்து உருவாக்கப்பட்டதே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். இந்த இரு கட்சிகளின் அனைத்து தலைவர்களும் தொண்டர்களும் தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட உதயசு10ரியன் சின்னத்தைக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியில். இணைந்து கொண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பித்த காலம் தொடக்கம் திருவாளர் கௌரவ மு.திருச்செல்வம் கியூ.சி, கௌரவ எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கியூ.சி, கௌரவ ஜி.ஜி.பொன்னம்பலம் கியூ.சி, த.வி.கூ யின் செயலாளர் நாயகமும் அன்றைய எதிர்கட்சி தலைவருமான கௌரவ அ.அமிர்தலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ. வெ.யோகேஸ்வரன், கௌரவ மு.சிவசிதம்பரம், கௌரவ தா.திருநாவுக்கரசு, கௌரவ.அ.தங்கதுரை,கௌரவ.க.துரைரெட்ணம் பா.உ, கௌரவ. கே.இராசலிங்கம் பா.உ, கௌரவ. வீ.என். நவரட்ணம் பா.உ, கௌரவ. எஸ்.கதிர்வேற்பிள்ளை பா.உ, கௌரவ.மு.ஆலாலசுந்தரம் பா.உ, கௌரவ. வீ.தர்மலிங்கம் பா.உ மற்றும் முன்னாள் யாழ் மேயர்களான திருமதி சரோஜினி யோகேஸ்வரன், திரு பொன்.சிவபாலன் இன்னும் பலர் உள்ளுரிலும், வெளிநாட்டிலும் ஈமக் கிரிகைகளுக்காக எடுத்துச் சென்ற வேளையில் புனிதமானதும், அனைத்து தமிழ் மக்களாலும் மதிக்கப்பட்டதுமான உதயசூரியன் கொடியினால் போர்த்தப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டனர்.
உதயசூரியன்
சின்னத்தை கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பதிலாக வீட்டுச் சின்னத்தை கொண்ட தமிழரசு கட்சியை மீள இயங்க வைக்க எவருக்கும் அவசியமும், தேவையும் இருக்கவில்லை. தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தமிழரசு கட்சியை செயலிழக்க செய்து வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியை வளர்த்தெடுத்தார். 1977ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் கூடுதலாக உள்ள தொகுதிகளில் 500 வாக்குகளால் தோல்வியடைந்த ஒரு தொகுதியைத் தவிர ஏனைய 19 தொகுதிகளிலும் வெற்றியீட்டியது.

மறைந்த தலைவர்கள் ஆரம்பகால உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியை சமாதானத்தையும், அகிம்சையையும் பேணிகாக்க தொடர்ந்து வரும் பல தலைமுறைகளுக்கு பரம்பரை சொத்தாக விட்டுச் சென்றுள்ளனர். தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா அவர்கள் தான் உருவாக்கி செயலிழக்க வைத்த தமிழரசு கட்சி என்றாவது ஒருநாள் தான் தமிழ் மக்களின் உரிமைகளை சாத்வீக முறையில் வென்றெடுக்கவென வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியை அழிப்பதற்கு யாரும் உபயோகிப்பார்கள் என்று கனவில் கூட ஒருபோதும் நினைத்திருக்கமாட்டார்.

என்னைப் பொறுத்தவரையில் நாட்டுக்கும் எனது மக்களுக்கும் கட்சியின் நலனுக்காக தம் உயிரை அர்ப்பணித்த பல்வேறு தலைவர்களுக்கும் எனது கடமையை செய்து விட்டேன். அகிம்சைக்கு கட்டுப்பட்ட அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் கதவுகள் என்றும் பூட்டப்பட்டு இருக்காது. அதற்கு முரணாக இக் கட்சியை காப்பாற்றி தலைவர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற பல்வேறு கஷ்டங்கள், இடையூறுகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

கட்சியில் நான் தொடர்ந்து செயல்படுவது எவருக்கேனும் இடைஞ்சலாக இருக்குமேயானால் இக் கட்சியை பொறுப்புள்ளவர்களிடம் கையளித்துவிட்டு ஒதுங்க தயாராக இருக்கின்றேன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் இலட்சியத்துக்காக உழைக்கக்கூடிய இளைஞர்களை ஆயிரக்கணக்கில் கட்சியுடன் இணைந்து பேராசையும், பேராவலும் கொண்ட அரசியல்வாதிகளிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்ற பகிரங்கமாக அழைக்கின்றேன். கட்சியின் கொள்கைகளுக்கு விசுவாசமாக உழைக்கும் அனைவரும் எம்முடன் இணையலாம் என்றும் கூறிவைக்க விரும்புகின்றேன்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

ஓம் ஆனந்தமிகு பஜனைப் பிரியரே! ஸரணம் ஐயப்பா!