தலைப்பை பார்த்துவிட்டு என்மீது யாரும் கோபம் கொள்ள வேண்டாம்! உண்மையைத்தான் எழுதுகிறேன். எதிர்க்கட்சியாக ஒரு காலம் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களை கொச்சைப்படுத்தி கேட்டது தமிழீழம் வாங்கினது ஜப்பான் ஜீப் என்று சொல்லி அவர்களுடைய ஜீப்புக்களையும் பறிமுதல் செய்து அல்லது கொழுத்தி சேதம் விளைவித்த வீரர்கள் இன்று என்ன பண்ணினார்கள்? பண்ணுகிறார்கள்? -
அவர்கள் துரோகிகள்! அவர்களுக்குப் பின்வந்த சிலர் மாமனிதர்கள். தற்போதுள்ளவர்கள்? இதற்காகத்தான் இந்தத் தலைப்பு! கீறிட்ட இடத்தில் மக்களா - தலைவர்களா - ஏகப்பிரதிநிதிகளா - அரசா - ஜனாதிபதியா என்பதை அவரவர் விளக்கத்திற்கு ஏற்ப வைத்துப் பொருத்தி அர்த்தப்படுத்தலாம்! நான் எம்மைப் பற்றித்தான்(தமிழர்களை முன்னிறுத்தி) இன்றைய இக்கட்டுரையில் எழுத முற்படுகிறேன்.
ஜனாதிபதித் தேர்தலை 2005இல் புறக்கணித்த வடக்கு கிழக்குத் தமிழர்கள் இந்தமுறை போட்டிபோட்டு கொன்றொழித்தவனுக்கும் கொன்றொழிக்க ஆணையிட்டவனுக்கும் வாக்குகளைப் போட்டுவிட்டு இப்போ யாருக்குப் போடுவதென முழிக்கிறார்களோ? அல்லது தனக்கு விசுவாசமாக இன்றும் மனதில் இருத்தி வைத்திருக்கும் தனக்குப்பிடித்த வேட்பாளருக்கு போடப்போகிறார்களோ? நாமறியோம்!
தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்று சொல்லி பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய 22 உறுப்பினர்களும் மக்கள் நலனைக்கருத்தில் கொண்டார்களோ தாம் பதவியில் இருக்கும் வரை விடுதலைப் புலிகளுக்கு வக்காளத்து வாங்கிவிட்டு - இப்போ அவர்கள் போய்த்தொலைந்தபின்னர் தமக்குள் அடிபட்டு மக்களைப் பகடைக்காய்களாக்கி தமது பதவிகளுக்காக எங்காவது சந்தர்ப்பம் வந்தால் சரி என்பதுபோல முன்பு ஜனாதிபதியாக இருந்த டிங்கிரி பண்டா சொன்னதுபோல பெரிய மரத்தில் படரும் செடி கொடிபோல ஒட்டத் துவங்கிவிட்டார்கள். மக்கள்மீது அக்கறை கொண்டவர்களாயிருந்தால் நான் சொல்லியபடி தாம் 22 பேரும் ஒன்றிணைந்து ஏதேனும் ஒரு உருப்படியான நடவடிக்கையை எடுத்திருப்பார்கள் - புலிகள் அழிந்தாலும் சரி - மக்கள் நடுவீதிக்கு வந்தாலும்சரி - என்று எண்ணிக் கொண்டு கதிரைகளுக்காக எங்காவது வெளிநாட்டிலிருந்தாலும் குறித்த காலத்தில் வந்து அமர்ந்து தமது படியைப் பெற்றவர்கள்தானே இந்தப் புண்ணியவான்கள். இப்போது மீண்டும் ஒரு தடவை மக்களை பகடைக் காய்களாக்கி திரும்பவும் சவாரிக்கு தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள்.
புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்கள் ஏதோ ஒரு நாட்டில் அகதியாக ஆனால் சுதந்திரமாக இருந்துகொண்டு - நார்நாராய் கிழித்தெறியப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு ஆணை பிறப்பித்துக் கொண்டிருப்பதை நினைத்தால் - அது வேறு ஒரு பெரிய சோகத்தை ஏற்படுத்துகிறது!
தாம் வாழும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நடந்து கொண்டு - அந்தந்த நாட்டு மொழிகளை வேறு கற்றுத் தேர்ந்து - அல்லது இன்றும் கற்றுக் கொண்டு - சொந்த நாட்டில் இருப்பவன் மாத்திரம் தமிழுக்காக - ஈழத்துக்காக - தொடர்ந்தும் அடி முட்டாளாக இருக்க வேண்டும் என்பதில் கங்கணம் கட்டி வாழ்வதும் வேதனை!
வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் பாவம்! கடந்த 10, 15 வருடங்களுக்கு மேலாக அரசின் சோதனைச் சாவடிகளுக்குள்ளும் - ஏகப்பிரதிநிதிகளின் எல்லைக் கோட்டுக்குள்ளும் தம் வாழ்வை பழக்கப்படுத்தி ஒரு கிணற்றுத் தவளை வாழ்வை மேற்கொண்டதை யாரும் மறந்துவிட முடியாது. இப்போதுதான் அவர்கள் நடமாடித் திரியும் சுதந்திரத்தையும் முழுமையாகப் பெறாவிட்டாலும் பரந்துவிரிந்து கிடக்கும் முழு இலங்கையையும் பார்க்கவும் பழகவும் முடிகிறது.
ஏகப் பிரதிநிதிகள் தாம் நினைத்தபோது அரச விருந்தினர்களாக எந்தவித சோதனைக் கெடுபிடியுமின்றி வன்னியிலிருந்து இலங்கை விமானப்படையின் சிறு விமானங்களிலும் ஹெலிகளிலும் கொழும்புக்கு வந்து உலக வலம் வந்ததும் குறிப்பிடப்பட வேண்டியதே!
கொஞ்சம் திரும்பி - சில விடயங்களைத் தெளிவாக ஆறியிருந்து யோசித்துப் பார்த்தால்(ஆடு மாடு இரை மீட்பதுபோல) எது சரி எது பிழை என விளங்கும்!
நாளைக்குச் சந்திப்போமா!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக