ஊடகங்களுக்கு - 22.10.2001
தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பத்திற்கேற்ப தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்ஈழ விடுதலை இயக்கம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவை ஒன்று சேர்ந்து இந்தக் கூட்டு அமைப்பை ஆரம்பித்து எதிர்வரும் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம். நாங்கள் புரிந்துணர்வுடன் ஒன்றாகச் சேர்ந்து இயங்க முடிவு செய்ததுபற்றி சில முரண்பட்ட செய்திகள் சில ஊடகங்களில் வெளிவந்திருப்பதால் இந்தக் கூட்டறிக்கையினை நாம் வெளியிடுகின்றோம்.
1. தமிழ்த் தேசிய இனத்தின் அபிலாஷைகளை பூரணமாகத் திருப்திப்படுத்தக் கூடியதும் நிறைவேற்றி வைக்கக் கூடியதுமான ஒரு அரசியல் ஏற்பாடு, தமிழ்த் தேசிய இனத்தின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், தமிழ்த்தேசிய இனத்தின் மரபுவழித் தாயகத்தில் நிறுவப்படவேண்டும் என்பதே இந்தக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.
2. தமிழ் மக்கள் தங்களின் அரசியல் உரிமைகளைப் பெறுவதற்காகப் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் இப்போராட்டம் சாத்வீகமாக அமைந்தது. நாளடைவில் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வு கிடைக்காது என்று ஏற்பட்ட நிலையில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலையேற்பட்டது.
3. கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தளராது ஆயுதப் போராட்டத்தை நடத்தி ஒப்பற்ற தியாகங்களைச் செய்திருக்கின்றது. தமிழ்த் தேசியப் பிரச்சினை, சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்டமும் அர்ப்பணிப்புகளும் தியாகமும் அதிமுக்கிய காரணமாக இருந்திருக்கின்றது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளையும் அபிலாஷைகளையும் வன்முறையால் அடக்கி ஒடுக்கிவிடமுடியாது என்பதனைச் சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் சகலரையும் உரண வைத்தவர்களும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரே! அவ்வண்ணம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமே அதி உன்னத நிலையைப் பெற்றிருக்கின்றது.
4. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அர்த்த பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாவிட்டால் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு சமாதான முறையில் அரசியல் தீர்வு காணப்பட முடியாது. எனவே அத்தகைய பேச்சுவார்த்தை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் மட்டுமே எவ்வித தாமதமுமின்றி ஆரம்பிக்கப்படுவது இன்றியமையாதது. துமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான பேச்சுவார்த்தைகள் அர்த்தபூர்வமாக அமையவும் அவை வெற்றிபெறவும் வழிவகுக்கப்பட வேண்டுமானால் வேறு எந்த ஒரு தமிழ் அமைப்புடனும் சமகாலப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படக்கூடாது.
5. தேர்தலின் பின்பும் எங்கள் கூட்டு அமைப்பு தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அரசியற் தீர்வு காண தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த அடிப்படையில்தான் இந்தக் கூட்டு அமைப்பு இயங்கும். நாங்கள் பாராளுமன்றத் தேர்தலில் நிற்பது அந்த நோக்கை அடைவதற்கேயன்றி பதவிகளைப் பெறுவதற்காக அல்ல என்பதனையும் வலியுறுத்த விரும்புகிறோம்.
கூட்டமைப்பு சார்பாக
இரா.சம்பந்தன்(ஒப்பம்) செயலாளர் நாயகம் தமிழர் விடுதலைக் கூட்டணி
ந. குமரகுருபரன்(ஒப்பம்) பொதுச் செயலாளர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
ந. சிறிகாந்தா(ஒப்பம்) முதல்வர் தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
சு.பிரேமச்சந்திரன்(ஒப்பம்) செயலாளர் நாயகம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
(இரு பக்கங்களில் வெளியான அறிக்கையின் முதற்பகுதி இன்று - மற்றையது நாளை )
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக