தேர்தல் நாள் நெருங்க நெருங்க – நடக்கின்ற – நடக்கப் போகின்ற செயல்களைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்ற நிலையில் இதை மிகவும் விரக்தி நிலையில் எழுதுகின்றேன்.
தற்போது கிடைத்துள்ள செய்திகளின்படி பார்த்தால் இந்தத் தடவை வடக்கு கிழக்கில் தமிழ் வாக்காளர்களின் வாக்குகள் சிதறி பாராளுமன்ற ஆசனங்கள் கடந்த 2004இல் பெற்றதில் அரைப் பங்காகுமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
கூட்டமைப்புக்கு 2001இல் 14 மாவட்ட ரீதியிலான உறுப்பினர்களும் 1 தேசியப்பட்டியலுமாக மொத்தம் 15 ஆசனங்கள் கிடைத்தன. 2004இல் 20 மாவட்ட ரீதியிலும் 2 தேசியப்பட்டியலிலும் மொத்தம் 22கிடைத்தது. இம்முறை குறைந்தது யாழ்ப்பாணத்தில் 4 வன்னியில் 2 திருமலையில் 1 மட்டக்களப்பில் 2 அம்பாறையில் 1 தேசியப்பட்டியல் 1 ஆக மொத்தம் 11. இது எனது கணக்கு. பொறுத்திருந்து பார்ப்போம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அதிகாரப்போக்கால் சிதறிய நாடு தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் மேலும் சிதறப்போகிறதா?
அனைத்துக்கட்சிகளுக்குள்ளும் பிளவை ஏற்படுத்தி தனது காய்நகர்த்தலில் ஜனாதிபதி மிகச் சிறப்பாக வெற்றியடைவாரா?அதாவது அவரது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் யுக்தி சாத்தியமாகுமா?
தமது குறுகிய சுயநலங்களுக்காக தமிழர்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்தபின்பும் வெட்கமில்லாமல் போட்டிபோடும் இந்தக் கூட்டமைப்புக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டவேண்டும். ஒன்றுபட்டு மக்கள் இவர்களை வீடுகளுக்கு அனுப்புவதே சரியான வழி!இதை தமிழ் ம(மா)க்கள் செய்வார்களா?
பழைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஓரிருவரைத்தவிர ஏனையோருக்கு ஓய்வூதியமும் கிடைத்துவிட்டது. பாவம் வாக்களித்த அப்பாவிப் பொதுமக்கள் நடுத்தெருவில் - அகதி முகாமில் - அடுத்தவர்கள் வீட்டில் அடுத்த நேரத்துக்கு என்ன செய்வது என்று ஏங்கித் தவிக்கும்பொழுது புதியவர்களுக்கு இனி ஓய்வூதியம் பெற வழி சமைப்போமா?
பிரதேச வாதத்தை ஏற்படுத்தி ஆயுதப் போராட்டத்தை( நான் ஏற்றுக்கொள்ளவில்லை) முடிவுக்கு கொண்டுவர அரும்பாடுபட்ட கருணா-பிள்ளையான் கூட்டமைப்பு இப்போதுள்ள கையறுநிலையில் என்ன செய்யப்போகிறார்கள்?
முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியதுபோல (இந்தச் செய்திபற்றி இதுவரை எனக்கு தெரியாமலிருந்தது தற்போது தான் எனது காதுகளுக்குள் எட்டியது அதனால் இதையும் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்) - 2004.3.30 தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற வேட்பாளர் ராஜன் சத்தியமூர்த்தியும் அவரது உறவினர் கந்தையா கனகசபையும் சுட்டுக்கொல்லப்பட்ட சில மணி நேரத்தில் யாழ்ப்பாணிகளை இன்று மாலை 4.00மணிக்கே உடனடியாக மட்டக்களப்பைவிட்டு வெளியேறும்படி ஒலிபெருக்கியில் வேண்டுகோள் விடுத்ததையும் மக்கள் அவசரஅவசரமாக தமது கடைத் திறப்புக்களை அவர்களிடம் கையளித்துவிட்டு வெளியேறிய சம்பவத்தை மறந்து விட முடியுமா?
யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பது எதற்கு?
முடிவெடுப்பது வாக்காளர்களாகிய நீங்களே!
இக் கட்டுரை மூலம் நான் பிரதேச வாதத்தை முன்னெடுப்பதாக யாரும் எண்ணவேண்டாம். இந்த ஆயுதப் போராட்டம் அமைதியாக இருந்த வடக்கு கிழக்குப் பகுதிகளை இன்று சுடுகாடாக மாற்றியிருப்பதுதான் மனவேதனை - தெரிந்தோ தெரியாமலோ மக்களும் வாக்களித்து இந்த நிலையை வாங்கிவிட்டார்கள்.
மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகுமென்று பலரும் சொல்கிறார்கள் - வெளிநாடுகளில் இருந்தபடி. பட்ட மக்களுக்குத்தானே அந்த வலியும் - நஸடமும் தெரியும்.
தந்தை செல்வாவைப் பற்றி ஒருவர் ஒரு கட்டுரையில் அப்படி எழுதியிருக்கிறார் இந்த நேரத்தில் தந்தையையும் தந்தையின் கட்சி மற்றும் சின்னத்தைப் பாவிக்கும் தமிழரசுக் கட்சிக்கும் அதன் சின்னமான வீட்டில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் அதில் வரும் ஒரு பந்தியை தெரிவிக்க விரும்புகிறேன். ஒரு உயிருக்கும் ஒரு உடமைக்கும் அழிவு வராமல் பார்த்துக்கொள் இதுதான் அவர் எங்களுக்குத் தந்த முழுமையான பொன் அமிர்தம். (தந்தை செல்வா 1898 - 1998 கனடா : பக்கம் 85இல் இருந்து)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக