
நாடு கடந்து இருப்பினும் அடிக்கடி யாழ்ப்பாண மாநகர விடயங்களில் அதிகளவு கவனம் செலுத்தும் நான் கடந்த வாரமும் இன்றும் யாழ்ப்பாண பொது நூலகருடன் தொடர்பு கொண்டபோது அவரது பேச்சில் விரக்தி தொனித்தது. என்ன என்று விலாவாரியாக விசாரித்தேன்.
கடந்த வாரம் தொடர்பு கொண்டபோது யாரோ ஒரு வெளிநாட்டவருடன் கதைத்துக் கொண்டிருந்த பொழுதிலும் என்னுடன் பேசியபோது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உரக்கச் சிரித்துப் பேசி வாசிப்பவர்களைக் குழப்புகிறார்கள் என்று சொன்னார்.
இன்று பேசும்போது - முதல்வருடைய அறிவுறுத்தலின்படி மாலை 5.00 மணிக்குப் பின் வருபவர்கள் பார்வையிட அறிவுப்புச் செய்யப்பட்டிருப்பினும் - வருவபர்கள் பொலிசாருடனும் இராணுவத்தினருடனும் சேர்ந்துவந்து தொல்லை கொடுப்பதாக மனவேதனையடைந்தார். ஒரு கட்டத்தில் நூலகப் பணியாளரை அச்சுறுத்துமளவுக்கு சுற்றுலாப்பயணிகளுக்காக இராணுவத்தினர் முறைகேடாக நடந்து கொள்வதாகவும் செய்தி கசிந்தது.
ஒரு கோவிலைப்போல நாம் பாதுகாத்த – பராமரித்த பொது நூலகம் இன்று சுற்றுலாப் பிரதேசமாக – கண்டபடி நடத்தப்படுவதை யாரும் கண்டு கொள்வதாக இல்லை. நூலகத்தில் பணிபுரிபவர்கள் தமது எல்லையைமீறி எதுவும் செய்யமுடியாது.
கொழும்பிலும் வேறு பிரதேசங்களிலும் நூலகங்களில் மிக அமைதியைப் பேணுவோர் யாழ்ப்பாண பொது நூலகத்தில் மட்டும் இப்படி குரங்காட்டம் பண்ணுவது ஏன் என்று கேட்கத் தோன்றுகிறது.
முன்பு ஒரு தடவையும் நூலகத்தினுள் இந்திய அதிகாரிகளும் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் நூலகத்தினுள் அங்குள்ள நடைமுறையை மீறி காலணிகளுடன் சென்றதையும் நான் குறிப்பிட்டதையும் நினைவுபடுத்தி – கல்வியறிவை வளர்க்கும் நூலகத்தின் நடைமுறையை அனைவரும் ஒழுங்காக கடைப்பிடிக்க - உரியவர்கள் ஆவன செய்ய வேண்டுமென நூலகத்தில் அக்கறையுடையவன் என்ற வகையில் நான் பணிவாக வேண்டுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக