சனி, 27 பிப்ரவரி, 2010

செத்துவிட்டாரென சிந்தித்ததனால் - எம்நாடும் செத்துக்கொண்டிருக்கிறதே! - தமிழ் முஸ்லிம் பேரினவாதங்கள் எனும் புதியபிசாசுகளும் இப்போது பித்துப்பிடித்து ...

தந்தை செல்வாவின் நூற்றாண்டுவிழாவுக்காக 1998இல் அன்றைய அமைச்சராக இருந்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் - எஸ்.ஜே.வியை என் இறைக்கைகளில் காணுங்கள் என்ற கவிதையிலிருந்து ஒரு சில பகுதிகளை இன்றைய தேவை கருதி பதிவிடுகிறேன்.

அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கும்
மானிடத்தை உயர்த்தி விடுவதற்காய் கை கொடுப்பவர்கள்!
மரமாகி நிழல் தருபவர்கள்!
மனச்சாட்சியை யார்க்கும் - எதற்குமே அடகு வைக்காதவர்கள்!....

இறந்த பின்பும் உயிர்வாழும் சிறந்த மனிதனை அழைத்துச் செல்ல வந்துள்ளேன்!

இலங்கைக்கு அவரின் தேவை உடனடியாக இருக்கிறது!
இரத்தக் கறைகளிளை கழுவித் துடைப்பதற்காய்!
பூமிக்கு உடனே அவர் தேவை!
அவருள்ளமெனும் கரையாத புதிய சவர்க்காரத்தினால் வட கிழக்கில் படிந்துள்ள அழுக்குகளைக் கழுவி அகற்றுவதற்காய் ஓடோடி வந்துள்ளேன்! முழு நாடுமே இருள் போக்க அந்த முழுமதியை தேடுவதால் ....

மறுக்கப்பட்ட உரிமைகள் மட்டுமல்ல
மறைக்கப்பட்ட உரிமைகள் மட்டுமல்ல
மறந்துவிட்ட உரிமைகளையும் தான் அடிக்கடி நினைவூட்டாவிட்டால்
எல்லாவற்றையும் சேர்த்து பொல்லாதவர்கள் பூமியில் புதைத்து விடுவார்கள்!
அத்துடன் நீதி நேர்மை உண்மை சத்தியம்......
என்று அத்தனை உயர்ந்த பண்பையும் எரித்தும் புதைத்தும் விடுவார்கள். அந்த புதைகுழிகளையும் கூடவே மறைத்தும் விடுவார்கள்....


ஐம்பது ஆண்டுகட்குப் பின்பு இந்த நாடு
மீண்டும் நீங்கள் காட்டிச் சென்ற வழியில்
சமாதானத் தாள்களில் புதுக்கவிதையொன்றை தீட்டிக்கொண்டிருக்கிறது.
பேரினவாதம் என்பதற்குப் பொருள் தந்த பேராசிரியனே!
உங்களையொரு பைத்தியக்காரன் என்று சொன்ன இந்த இலங்கைத் திருநாடு
அதையின்று மறந்து
அப்படிச் சொன்னவர்களைத்தான் இத்தனை காலமும்
மனநோய்விடுதியில் வைத்திருக்க வேண்டும்
என்ற ஒரு குற்ற ஒப்புதலையும் செய்து கொண்டிருக்கிறது.

அதுமட்டுமன்றி இந்த நாடு பேரினவாதத்திற்கு
புது இலக்கணங்களும் கூறிக்கொண்டிருக்கிறது!
இந்த நாட்டை குட்டிச்சுவராக்கிய பேயும் அதுதான்!
பிசாசும் அதுதான்!
என்று அடையாளமும் கண்டிருக்கிறது!
தமிழ் முஸ்லிம் பேரினவாதங்கள் எனும்
புதிய பிசாசுகளும் இப்போது
பித்துப் பிடித்து அலைவதால்
அத்தனை பேய்களுக்கும் மடைவைத்து
வெட்டி துண்டாடி விளையாடி மண்ணில் புதைக்க வந்துள்ள
சித்தம் தெளிந்தவர்கள்தான்
உங்களுக்காய் ஒரு சிறு விழாவை எடுக்கின்றோம்!
கண்டு களியுங்கள்! உங்கள்
கண்கள் இனிக் கலங்கவே கூடாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக